என் தந்தை திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் மணியகாரர் குடும்பத்தில்
முதல் வாரிசாக பிறந்தவர்.
மனைவி இரு மகள்களை விட ஊரையும், வீட்டையும் நேசிக்கும் மண் வாசனை மிகுந்தவர். அதுவும் வீட்டின் மேல் உயிர். அழகாக பராமரிப்பார்.
ஏற்ற தாழ்வு பாராமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார். பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆண் வாரிசு இல்லாததை பற்றி கவலை பட மாட்டார். இன்று நான் பொறியாளராக அவரே காரணம். அவரும் என் சித்தப்பாவும் சில விசயங்களில் எதிர்மறையாக இருந்தாலும் ஒருவரைஒருவர் விட்டு கொடுக்கமாட்டார்கள்.
வேலை காரணமாக சில வருடங்கள் வெளியூரில் வாழ்ந்தாலும் ,கடந்த பாத்து ஆண்டுகளாக சொந்த ஊரில் வாழ்ந்து வந்தார்.வீட்டின் நடு கூடத்தில் போட்டு இருந்த ஊஞ்சலில் தான் பெரும்பாலும் அமர்ந்து இருப்பார். அந்த ஊஞ்சல் மற்றும் வீட்டில் உள்ள அவர் பாட்டி காலத்து மரச்சாமான்கள் தான் அவருக்கு பொக்கிஷம்.
நான் கோவையில் புதிதாய் வீடு கட்டிய போது அந்த ஊஞ்சலை எடுத்துகொள்ள சொன்னார்.சித்தப்பாவும் அப்பாவுக்கும் பொதுவாய் உள்ள வீட்டில் இருந்து ஊஞ்சலை எடுப்பது சரியாகாது என கூறி மறுத்து விட்டேன். அதுவுமில்லாமல் என் சித்தப்பாவுக்கும் அந்த ஊஞ்சல் மேல் அலாதி பிரியம்.
எல்லார் வீட்டிலும் நடப்பது போல் எங்க வீட்டிலும் பாகம் பிரிக்கும் நேரம் வந்தது. அப்பா வீட்டை தம்பி கேட்க மாட்டான் தனக்கு பின் தம்பி மகனுக்கு வீட்டை குடுத்து விடலாம் என நினைத்தார். நாங்களும் கோவையில் சித்தப்பாவிற்கு சொந்த வீடு இருந்ததால் கிராமத்திற்கு வர மாட்டார் என நினைத்தோம்.
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ??????????!!!!!!!!!!!!!!!!!
சித்தப்பா கண்டிப்பாக தனக்கு வீடு வேண்டும் என கூறி விட்டார். அந்த ஒரு வார்த்தையில் என் தந்தை உடைந்து விட்டார். வாழ்ந்த வீட்டை இரண்டாக பிரிப்பது என்னால் முடியாது என கூறி தம்பிக்கு வீட்டை கொடுத்து விட்டார். ஐந்து தலைமுறை சொத்து ஆண் வாரிசுக்கே இருக்கட்டும் என நினைத்தார்.
ஆனால் வீட்டை காலி செய்து விட்டு வரும் போது அவர் மனம் பட்ட பாட்டை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் மிகவும் ஆசை பட்ட
சில மரச் சாமான்களை எடுத்துவந்து விட்டார். ஊஞ்சலை எடுக்க வேண்டும் என அவர் கூறிய போது என் கணவர் வேண்டாம் வீட்டிற்கு அழகான அந்த ஊஞ்சலை நாம் எடுத்துவந்து விட்டால் அவர்களுக்கு வீட்டை குடுத்து பலனில்லை மிகவும் சங்கடபடுவார்கள் என கூறி தடுத்து விட்டார்.
வீட்டை விட்டு வந்த பின் அவர் வாழ்ந்த நாட்கள் நாற்பது மட்டுமே. உடல் நலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் இருந்த அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் " இருப்பது வாடகை வீடு . எனக்கு ஏதாவது ஆகி விட்டால் எங்கே எடுத்து செல்வது என கஷ்டப்பட வேண்டாம் நேராக மின்
மயானம் எடுத்து செல்லுங்கள்" என்பது தான். அந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
வீட்டை வாங்கி கொண்டு கிராமத்திற்கு சென்ற என் சித்தப்பாவும் இந்த ஆண்டு இறந்து விட்டார் . சொந்த ஊரில் வாழ்ந்தவர் கோவையிலும்
கோவையில் வாழ்ந்தவர் சொந்த ஊரிலும் இறுதி நாட்களை கழித்தது இறைவனின் செயல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.
சித்தப்பா மகன் வீட்டை காலி செய்து கொண்டு கோவை வந்து விட்டான்.மிகவும் தயக்கத்துடன் தான் நான் என் தம்பியிடம் அப்பா நினைவாக அந்த ஊஞ்சல் எனக்கு வேண்டும் என கேட்டேன்.அவனும் சரி என கூறி எனக்கு அதை மிகவும் சந்தோசதுடனே கொடுத்தான்.
இன்று அந்த ஊஞ்சல் எங்கள் வீடு போர்டிகோவை அலங்கரிக்கிறது. ரசித்து பார்க்க நினைத்தவர் இன்று இல்லை.
இருந்தாலும் தாய்வழி சொத்தாக இந்த ஊஞ்சல் என் மகனுக்கு கிடைத்ததில் தான் எனக்கு மகிழ்ச்சியே.இதற்கு இணை வேறு இல்லை.

No comments:
Post a Comment