Tuesday, 21 July 2009

இலவு காத்த கிளிகள் !!

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள் , நிரந்தரமில்லா வேலைவாய்ப்பு பற்றி இன்று மூலைமுடுக்கு எல்லாம் பேசப்படுகிறது.
சுயசார்பில்லாமல் அடுத்த நாட்டின் பொருளாதரத்தை நம்பி காலத்தை ஓட்டும் நம் மக்கள் தங்களின் வீண் போராட்டத்தினால் மூடிய தொழிற்சாலைகள் தான் எத்தனை ! எத்தனை ?!!!
சென்னைக்கு இணையாக இருக்க வேண்டிய கோவை மாநகரம் சற்று பின் தங்கியதற்கு காரணம் தொழிலாளர் போராட்டங்களே !!
கரிச காட்டு மண்ணில் அருமையாய் விளைந்த பருத்தியை நம்பி கோவையில் ஆரம்பிக்கப்பட்ட மில்கள் நகர வளர்ச்சியின் விதை . படிப்பறிவு இல்லா மக்களுக்கு தேடி தேடி வேலை கொடுத்தனர் அன்று . அதுவும் PF,ESI, பணி நிரந்தரம் என அனைத்து வசதிகளுடன் . ஒரு குடும்பத்தில் ஒருவர் நிச்சயம் மில் தொழிலாளி . ஆண்களுக்கு இணையாக பெண்களும் மில் வேலைக்கு சென்றனர் . இவர்களால் பயன் அடைந்த முதலாளிகளும் ஆண்டுக்கு ஒரு முறை Bonus என அறிமுகப்படுத்தி Extra benefit அளித்தனர் . மில் வருமானத்தால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை உயர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை .
அடுத்த படிக்கு முன்னேற எண்ணி தங்கள் குழந்தைகளை தொழிற்கல்வி படிக்க வைத்தனர் . ஏனெனில் Textile Machinery, Pump Manufacturing , Foundry ஆகிய இன்ஜினியரிங் தொழில்கள் செழிக்க தொடங்கின. LMW,LGB,Pricol,Ramakrishna Steel, PSG Foundry , South India Viscose (Sirumugai) என வேலைவாய்ப்புகள் மக்களுக்கு குவிய தொடங்கின. சிக்கனத்தை பற்றி கோவை மக்களிடம் தான் கற்க வேண்டும் . சிறுக சிறுக சேர்த்த பணத்தில் சொந்த வீடுகள் , பருத்தி காடுகளை அழித்து கிராமங்களை Concrete நகரமாக மாற்ற ஆரம்பித்தது.
நகர வளர்ச்சி ஆலமரமாய் கிளை பரப்பி வேலை தேடி வந்த பல மாவட்ட பறவைகளுக்கு நிழல் கொடுத்தது.

துடியலூரில் Texmo , நரசிம்ம நாய்க்கன் பாளையத்தில் Narasimha Mills, பெரிய நாய்க்கன் பாளையத்தில் LMW,Pricol , காரமடையில் Ramakrishna Steels , சிறுமுகையில் South India Viscose என கோவையில் இருந்து மேட்டுபாளையம் வரை தொழிற்சாலைகள் தான். நகரமே சங்கு ஒலியினால் தான் கண் விழிக்கும்.

சற்று வேர் ஊன்றியவுடன் , மக்களுக்கு தங்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைவோ என தோன்ற தொடங்கி சின்ன சின்ன பிரசனைகள் பெரிதாக ஆரம்பித்தது. மில்களில் போனஸ் போராட்டங்கள் மழை காளான் போல் தீபாவளி வந்ததும் முளை விட தொடங்கியது. வருடாவருடம் தீபாவளி போனஸ் என்பது இந்தியா பாகிஸ்தான் சமாதான ஒப்பந்தம் போல் பண்டிகை முடிந்தும் பேசி கொண்டு இருந்தார்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக . பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து போனஸ் போன்ற சலுகைகள் கொடுக்க முடியாத முதலாளிகள் மில்களை மூட ஆரம்பித்தனர். பெருவாரியான மில்கள் மூடப்பட்டது. இன்ஜினியரிங் தொழிலிலும் போராட்டங்கள் அரும்ப துவங்கியது . திறம் வாய்ந்த நிர்வாகதினரால் மட்டுமே அவை தகர்த்து எறியப்பட்டது.

பேசி தீர்க்க முடியாத பிரசனை இல்லை. ஆனால் வீண் போராட்டத்தினால் நிர்வகதினர்க்கு நெருக்கடியை தான் உருவாக்குகிறோம் . Textool , Ramakrishna Steel ஆகியவை போராட்டத்தினால் மூடப்பட்ட தொழிற்சாலைகள். சொந்த தொழில் என்பது கோவை மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் அவற்றின் பிள்ளையார் சுழி இப்பெரிய நிறுவனங்கள் தான்.

கோவையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனம் Pricol. நிரந்தர மற்றும் Contract பணியிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். கோவையிலே மிக அதிக போனஸ் தர கூடிய நிறுவனம். பல ஆண்டுகளாக சின்ன சின்ன பிரசனைகளுடன் வேலை செய்து வந்தவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். விளைவு இன்று 2000 Contract தொழிலாளிக்கு வேலை இல்லா நிலை. கூட்டமாக இருந்து பார்க்கும் பிரசனைகள் , தனி ஒரு குடும்பத்தின் பார்வையில் பூஜியம்.

தனி மனித வளர்ச்சி , குடும்பத்தின் உயர்வு , துணை தொழில் முனைவோர் வளர்ச்சி , நிறுவனத்தை சுற்றி உள்ள சிறு வணிகர் வியாபாரம் என அனைத்தும் ஒரு பெரிய நிறுவனத்தின் வளர்ச்சி பொறுத்து தான் அமையும் .

படித்து பட்டம் பெற்றவர்களுகே ஒரு Pink Slip கொடுத்தால் வேலை காலி . தொழிலாளர் சட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதை ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும் . தொழிலாளர் பிரசனைகளை ஒரு குடும்ப பிரச்னையாக பாவித்து தீர்க்க முயல வேண்டும்.

"போராட்டத்தின் மூலம் தீர்வு என்றால் அது இலவு காத்த கிளி கதை தான் !!"

Thursday, 2 July 2009

தாம்தூம் திருமணங்கள்

ஆவணிமாதம் வந்தாலே குடும்ப தலைவனின் பாடு திண்டாட்டம் தான் .

வீட்டில் நிறைந்து கிடக்கும் கல்யாண பத்திரிகைகளை தேதிவாரியாக அடுக்கி தகுதிக்ஏற்ப புடவைகளை (மண்டபத்தை பொறுத்து ) செலக்ட் செய்து Dry Wash க்கு கொடுத்து , அழகு நிலையம் சென்று என குடும்ப நிதி துறைக்கு இந்த மாதம் பட்ஜெட்டில் புடவை தான்.

நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் என்றால் இன்னும் கஷ்டம். ஆடி தள்ளுபடியில் விலை குறைவு என கணவரிடம் இட்டுக்கட்டி புது பட்டு புடவை வாங்கி கணவரின் வழுக்கை தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

திருமணத்திற்கு செல்பவர்களே இந்த பந்தா என்றால் கல்யாண வீட்டார் செய்வதை பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.

மத்திய நடுத்தர குடும்பங்கள் இளைய தலைமுறையின் வருமானத்தால் சற்று அகல கால் வைக்கவே விரும்புகிறார்கள்.
மேல் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வீட்டு திருமணம் Exclusive ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
புலியை பார்த்து சூடு போட்டு கொண்ட பூனையை போல் , கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெண் /பிள்ளையின் சேமிப்பை தண்ணீராய் செலவு செய்கின்றனர்.

திருமணம் முடிவானவுடன் தர வரிசையில் முதல் மூன்று இடத்தில் உள்ள மண்டபம் மற்றும் சமையல்காரரை தேடி ஓடுகின்றனர். இதற்கு சிபாரிசு வேறு !?

அடுத்தது மெனு . குடும்பத்தினர் அனைவரும் மண்டையை பிய்த்து கொண்டு , யாரும் போடாத ஒரு உணவு வகையாவது இருக்குமாறு முடிவு செய்கிறார்கள் .
நிச்சயம் அது யாரும் வாயில் போடாத உணவு தான்!!!.

மணவறை,மாலை,செண்டு என அனைத்தும் பெண் / மாப்பிள்ளையின் உடையின் நிறத்திற்கு பொருத்தமான மலர்களை தேர்வு செய்கிறார்கள்.
மலர்களின் மணத்தை விட நிறமே முக்கியத்துவம் பெறுகிறது.

பெண் வீட்டாராக இருப்பின் இன்னும் கஷ்டம்டா சாமீ . பெண் அலங்காரத்திற்கு
குறைந்தபட்சம் Rs.3000/- வேண்டும். அழகு நிலையத்தில் திருமண பெண் அலங்காரத்திற்கு Rs. 3000 ஆரம்பித்து Rs.30000/- வரை சொல்கிறார்கள்.
கேட்டால் Package என்கிறார்கள். Rs.30000/- புக் செய்கிறவர்கள் ஒரு மாதம் அழகு நிலையமே கதி என்று கிடக்க வேண்டுமாம். என்ன கொடுமை சார் இது ?!!!
பெண் வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் மணபெண்ணுக்கு நிகராக புது பட்டு புடவை , அதில் embroidary , அலங்காரம் என பட்டை கிளப்புகிறார்கள்.

மண பெண்ணுக்கு எடுக்கப்படும் புடவை விலை கேட்டால் Heart Attack வந்து விடும். குறைந்தபட்சம் Rs.20000/- . அப்புறம் அதில் Designer Embroidary வேறு.
இந்த புடைவையின் விலை மூலமாக தான் மாப்பிள்ளை வீட்டாரின் பண பலம் உறவினர்களுக்கு தெரிகிறது.

மாப்பிள்ளை அழைப்பின் போது எடுத்து செல்லும் சீர் தட்டுகளை அலங்காரம் செய்ய அடையார் ஆனந்த பவன் வேண்டும் . அதுவும் Kaju Sweets ( Rs.350 /Kg).
பெண் வீட்டின் செல்வ செழிப்பு இந்த தட்டுகளில் தான் வெளிப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு திருமணத்தின் மூலமாக தான் இரு வீட்டின் பொருளாதார நிலைமை உலகுக்கு தெரிகிறது .

தற்போது சென்னையில் பரவி வரும் ஒரு பழக்கம் விரைவில் கோவை வந்து சேரும் என நினைக்கிறேன் . திருமணத்தில் வந்தோரை "வாங்க" என இன்முகத்துடன் வரவேற்க கல்லூரி பெண்களை நிற்க செய்கிறார்கள் சென்னையில்?!!!!
"வாங்க வாங்க" என வாய் நிறைய வரவேற்கும் இடத்தில் முகம் தெரியா நபர்கள்.
இதனால் யார் வீட்டு திருமணத்திற்கு வந்துள்ளோம் என குழம்ப தான் வாய்ப்புகள் அதிகம். வரவேற்பில் அன்பை விட அழகு தானே முக்கியம் ?
பரவட்டும் இந்த புது கலாச்சாரம் கொங்கு மண்டலத்திலும் !!!!
"மலர்களின் ராஜா ஒரு ரோஜா தான் . அனைத்து மலர்களும் ராஜாவாக ஆசைபடுகிறதே!"