Wednesday, 17 June 2009

சகலகலாவல்லவர்

எங்கள் வீட்டின் சகல கலா வல்லவர் சாட்சாத் என் மாமனார் தான்.

இன்று அவர் எங்களுடன் இல்லை என்றாலும் அவர் நினைவுகள் பசுமையாய்
அனைவர் மனதிலும் பதிந்து உள்ளது.



என் மாமனார் திரு.நாராயணசாமி, பள்ளி படிப்பை முடித்தவுடன் PSG Industrial Institute இல் வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறும் போது Pump Assembly Superintendent ஆக ஓய்வு பெற்றார். அவர் அங்கு வேலை செய்யும் போது நான் PSG Polytechnic இல் Diploma பயின்று வந்தேன். என் Workshop training இன் போது இவரிடம் தான் ரிப்போர்ட் Sign வாங்க வேண்டும். வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் Sandwich Students இவருக்கு "மாமா " என புனை பேர் வைத்து இருந்தோம். பின்னாளில் அவரே எனக்கு மாமனார் ஆனது தான் ஆச்சர்யம்!!!. என் திருமணத்திற்கு வந்த என் கிளாஸ் மேட் அனைவரும் "மாமாவா உன் மாமனார் ?" என துக்கம் விசாரித்தது தனி கதை .

வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும், வீட்லேயே Workshop வைத்து , என் கணவரையும் வேலைக்கு அனுப்பாமல் சொந்த தொழில் செய்ய வைத்தார்.
வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பாக நேரம் தவறாதவர்.
அவர் நெற்றியில் நாமத்துடன் வெள்ளை வேட்டி , கை வைத்த பனியனுடன்
Workshop வாசலில் இருக்கிறார் என்றால் காலை மணி சரியாக 7 என சொல்லலாம். ஒரு வேலையை செய்யும் முறை பற்றி தெளிவாக சொல்லி குடுப்பார். அவர் கடைசி வரை வேலை செய்தார். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எடுத்துகாட்டாக இருந்தார்.
வீட்டுக்கு தளம் போடுவது, தொட்டி கட்டுவது, மர கதவு, இரும்பு கதவு செய்வது போன்ற அனைத்து வேலைகளும் செய்வார். எங்கள் வீடுகளில் இன்னும் அவர் செய்த இரும்பு Compund Gate தான் உள்ளது.
எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முடி திருத்தும் பணியை கூட அழகாக செய்வார்.

அவர் கை வண்ணம் எங்கள் சமையல் அறையையும் அலங்கரிக்கும். Cooker, பால் Cooker கை பிடி உடைந்தால் புதிய bakelite கைப்பிடி மாற்ற விட மாட்டார். தானே மர கைப்பிடி செய்து மாற்றுவார். கத்தி , இரும்பு உரல் , தோசை கல் அனைத்தும் அவர் கைவண்ணம் தான்.
சமையலில் அவர் நள மகாராஜா தான் . சூப்பரா சமைப்பார் . யாருக்காகவும் காத்திருக்காமல் அவர் சமைக்க ஆரம்பித்து விடுவார். என்ன அவர் சமையலில் முருங்கைகாய் முக்கிய இடம் பிடிக்கும். தன் பசியை மட்டுமன்றி அனைவரின் பசி , ருசி பற்றி அறிந்தவர். பணி , பள்ளியில் இருந்து திரும்பும் போது மாலை உணவு தயாராக இருக்கும். நாங்கள் தனி குடித்தனம் இருந்தாலும் அவர் செய்யும் மாலை உணவை எங்களுக்கு தவறாமல் குடுத்து அனுப்புவார்.

மனைவிக்கு சுதந்திரம் அளிப்பதில் அவர் அர்த்தனரிஸ்வரர்.
வரவு , செலவுகளை சரியாக கணக்கு வைப்பார் சித்ரகுப்தனை போல் !
இவரின் சிக்கனத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும்.
வாழ்வில் எளிமையை பற்றி இவரிடம் தான் கற்க வேண்டும்.
இவரிடம் நல்ல பெயர் வாங்குவது வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்
பெறுவதற்கு சமம்.

மொத்தத்தில் இவர்
" மலர்களில் ஒரு பிரம்ம கமலம் "



No comments:

Post a Comment