Sunday 7 November, 2010

போற்றி பாடடி பெண்ணே !!!!

என் தந்தை திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் மணியகாரர் குடும்பத்தில்
முதல் வாரிசாக பிறந்தவர்.
மனைவி இரு மகள்களை விட ஊரையும், வீட்டையும் நேசிக்கும் மண் வாசனை மிகுந்தவர். அதுவும் வீட்டின் மேல் உயிர். அழகாக பராமரிப்பார்.
ஏற்ற தாழ்வு பாராமல் அனைவரிடமும் அன்பாக பழகுவார். பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆண் வாரிசு இல்லாததை பற்றி கவலை பட மாட்டார். இன்று நான் பொறியாளராக அவரே காரணம். அவரும் என் சித்தப்பாவும் சில விசயங்களில் எதிர்மறையாக இருந்தாலும் ஒருவரைஒருவர் விட்டு கொடுக்கமாட்டார்கள்.
வேலை காரணமாக சில வருடங்கள் வெளியூரில் வாழ்ந்தாலும் ,கடந்த பாத்து ஆண்டுகளாக சொந்த ஊரில் வாழ்ந்து வந்தார்.வீட்டின் நடு கூடத்தில் போட்டு இருந்த ஊஞ்சலில் தான் பெரும்பாலும் அமர்ந்து இருப்பார். அந்த ஊஞ்சல் மற்றும் வீட்டில் உள்ள அவர் பாட்டி காலத்து மரச்சாமான்கள் தான் அவருக்கு பொக்கிஷம்.
நான் கோவையில் புதிதாய் வீடு கட்டிய போது அந்த ஊஞ்சலை எடுத்துகொள்ள சொன்னார்.சித்தப்பாவும் அப்பாவுக்கும் பொதுவாய் உள்ள வீட்டில் இருந்து ஊஞ்சலை எடுப்பது சரியாகாது என கூறி மறுத்து விட்டேன். அதுவுமில்லாமல் என் சித்தப்பாவுக்கும் அந்த ஊஞ்சல் மேல் அலாதி பிரியம்.

எல்லார் வீட்டிலும் நடப்பது போல் எங்க வீட்டிலும் பாகம் பிரிக்கும் நேரம் வந்தது. அப்பா வீட்டை தம்பி கேட்க மாட்டான் தனக்கு பின் தம்பி மகனுக்கு வீட்டை குடுத்து விடலாம் என நினைத்தார். நாங்களும் கோவையில் சித்தப்பாவிற்கு சொந்த வீடு இருந்ததால் கிராமத்திற்கு வர மாட்டார் என நினைத்தோம்.
நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ??????????!!!!!!!!!!!!!!!!!
சித்தப்பா கண்டிப்பாக தனக்கு வீடு வேண்டும் என கூறி விட்டார். அந்த ஒரு வார்த்தையில் என் தந்தை உடைந்து விட்டார். வாழ்ந்த வீட்டை இரண்டாக பிரிப்பது என்னால் முடியாது என கூறி தம்பிக்கு வீட்டை கொடுத்து விட்டார். ஐந்து தலைமுறை சொத்து ஆண் வாரிசுக்கே இருக்கட்டும் என நினைத்தார்.
ஆனால் வீட்டை காலி செய்து விட்டு வரும் போது அவர் மனம் பட்ட பாட்டை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் மிகவும் ஆசை பட்ட
சில மரச் சாமான்களை எடுத்துவந்து விட்டார். ஊஞ்சலை எடுக்க வேண்டும் என அவர் கூறிய போது என் கணவர் வேண்டாம் வீட்டிற்கு அழகான அந்த ஊஞ்சலை நாம் எடுத்துவந்து விட்டால் அவர்களுக்கு வீட்டை குடுத்து பலனில்லை மிகவும் சங்கடபடுவார்கள் என கூறி தடுத்து விட்டார்.
வீட்டை விட்டு வந்த பின் அவர் வாழ்ந்த நாட்கள் நாற்பது மட்டுமே. உடல் நலம் பாதிக்கபட்டு மருத்துவமனையில் இருந்த அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் " இருப்பது வாடகை வீடு . எனக்கு ஏதாவது ஆகி விட்டால் எங்கே எடுத்து செல்வது என கஷ்டப்பட வேண்டாம் நேராக மின்
மயானம் எடுத்து செல்லுங்கள்" என்பது தான். அந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

வீட்டை வாங்கி கொண்டு கிராமத்திற்கு சென்ற என் சித்தப்பாவும் இந்த ஆண்டு இறந்து விட்டார் . சொந்த ஊரில் வாழ்ந்தவர் கோவையிலும்
கோவையில் வாழ்ந்தவர் சொந்த ஊரிலும் இறுதி நாட்களை கழித்தது இறைவனின் செயல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்.

சித்தப்பா மகன் வீட்டை காலி செய்து கொண்டு கோவை வந்து விட்டான்.மிகவும் தயக்கத்துடன் தான் நான் என் தம்பியிடம் அப்பா நினைவாக அந்த ஊஞ்சல் எனக்கு வேண்டும் என கேட்டேன்.அவனும் சரி என கூறி எனக்கு அதை மிகவும் சந்தோசதுடனே கொடுத்தான்.

இன்று அந்த ஊஞ்சல் எங்கள் வீடு போர்டிகோவை அலங்கரிக்கிறது. ரசித்து பார்க்க நினைத்தவர் இன்று இல்லை.
இருந்தாலும் தாய்வழி சொத்தாக இந்த ஊஞ்சல் என் மகனுக்கு கிடைத்ததில் தான் எனக்கு மகிழ்ச்சியே.இதற்கு இணை வேறு இல்லை.

Tuesday 21 July, 2009

இலவு காத்த கிளிகள் !!

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள் , நிரந்தரமில்லா வேலைவாய்ப்பு பற்றி இன்று மூலைமுடுக்கு எல்லாம் பேசப்படுகிறது.
சுயசார்பில்லாமல் அடுத்த நாட்டின் பொருளாதரத்தை நம்பி காலத்தை ஓட்டும் நம் மக்கள் தங்களின் வீண் போராட்டத்தினால் மூடிய தொழிற்சாலைகள் தான் எத்தனை ! எத்தனை ?!!!
சென்னைக்கு இணையாக இருக்க வேண்டிய கோவை மாநகரம் சற்று பின் தங்கியதற்கு காரணம் தொழிலாளர் போராட்டங்களே !!
கரிச காட்டு மண்ணில் அருமையாய் விளைந்த பருத்தியை நம்பி கோவையில் ஆரம்பிக்கப்பட்ட மில்கள் நகர வளர்ச்சியின் விதை . படிப்பறிவு இல்லா மக்களுக்கு தேடி தேடி வேலை கொடுத்தனர் அன்று . அதுவும் PF,ESI, பணி நிரந்தரம் என அனைத்து வசதிகளுடன் . ஒரு குடும்பத்தில் ஒருவர் நிச்சயம் மில் தொழிலாளி . ஆண்களுக்கு இணையாக பெண்களும் மில் வேலைக்கு சென்றனர் . இவர்களால் பயன் அடைந்த முதலாளிகளும் ஆண்டுக்கு ஒரு முறை Bonus என அறிமுகப்படுத்தி Extra benefit அளித்தனர் . மில் வருமானத்தால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை உயர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை .
அடுத்த படிக்கு முன்னேற எண்ணி தங்கள் குழந்தைகளை தொழிற்கல்வி படிக்க வைத்தனர் . ஏனெனில் Textile Machinery, Pump Manufacturing , Foundry ஆகிய இன்ஜினியரிங் தொழில்கள் செழிக்க தொடங்கின. LMW,LGB,Pricol,Ramakrishna Steel, PSG Foundry , South India Viscose (Sirumugai) என வேலைவாய்ப்புகள் மக்களுக்கு குவிய தொடங்கின. சிக்கனத்தை பற்றி கோவை மக்களிடம் தான் கற்க வேண்டும் . சிறுக சிறுக சேர்த்த பணத்தில் சொந்த வீடுகள் , பருத்தி காடுகளை அழித்து கிராமங்களை Concrete நகரமாக மாற்ற ஆரம்பித்தது.
நகர வளர்ச்சி ஆலமரமாய் கிளை பரப்பி வேலை தேடி வந்த பல மாவட்ட பறவைகளுக்கு நிழல் கொடுத்தது.

துடியலூரில் Texmo , நரசிம்ம நாய்க்கன் பாளையத்தில் Narasimha Mills, பெரிய நாய்க்கன் பாளையத்தில் LMW,Pricol , காரமடையில் Ramakrishna Steels , சிறுமுகையில் South India Viscose என கோவையில் இருந்து மேட்டுபாளையம் வரை தொழிற்சாலைகள் தான். நகரமே சங்கு ஒலியினால் தான் கண் விழிக்கும்.

சற்று வேர் ஊன்றியவுடன் , மக்களுக்கு தங்கள் அனுபவித்து வந்த சலுகைகள் குறைவோ என தோன்ற தொடங்கி சின்ன சின்ன பிரசனைகள் பெரிதாக ஆரம்பித்தது. மில்களில் போனஸ் போராட்டங்கள் மழை காளான் போல் தீபாவளி வந்ததும் முளை விட தொடங்கியது. வருடாவருடம் தீபாவளி போனஸ் என்பது இந்தியா பாகிஸ்தான் சமாதான ஒப்பந்தம் போல் பண்டிகை முடிந்தும் பேசி கொண்டு இருந்தார்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக . பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து போனஸ் போன்ற சலுகைகள் கொடுக்க முடியாத முதலாளிகள் மில்களை மூட ஆரம்பித்தனர். பெருவாரியான மில்கள் மூடப்பட்டது. இன்ஜினியரிங் தொழிலிலும் போராட்டங்கள் அரும்ப துவங்கியது . திறம் வாய்ந்த நிர்வாகதினரால் மட்டுமே அவை தகர்த்து எறியப்பட்டது.

பேசி தீர்க்க முடியாத பிரசனை இல்லை. ஆனால் வீண் போராட்டத்தினால் நிர்வகதினர்க்கு நெருக்கடியை தான் உருவாக்குகிறோம் . Textool , Ramakrishna Steel ஆகியவை போராட்டத்தினால் மூடப்பட்ட தொழிற்சாலைகள். சொந்த தொழில் என்பது கோவை மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் அவற்றின் பிள்ளையார் சுழி இப்பெரிய நிறுவனங்கள் தான்.

கோவையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய நிறுவனம் Pricol. நிரந்தர மற்றும் Contract பணியிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். கோவையிலே மிக அதிக போனஸ் தர கூடிய நிறுவனம். பல ஆண்டுகளாக சின்ன சின்ன பிரசனைகளுடன் வேலை செய்து வந்தவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தனர். விளைவு இன்று 2000 Contract தொழிலாளிக்கு வேலை இல்லா நிலை. கூட்டமாக இருந்து பார்க்கும் பிரசனைகள் , தனி ஒரு குடும்பத்தின் பார்வையில் பூஜியம்.

தனி மனித வளர்ச்சி , குடும்பத்தின் உயர்வு , துணை தொழில் முனைவோர் வளர்ச்சி , நிறுவனத்தை சுற்றி உள்ள சிறு வணிகர் வியாபாரம் என அனைத்தும் ஒரு பெரிய நிறுவனத்தின் வளர்ச்சி பொறுத்து தான் அமையும் .

படித்து பட்டம் பெற்றவர்களுகே ஒரு Pink Slip கொடுத்தால் வேலை காலி . தொழிலாளர் சட்டங்கள் நமக்கு சாதகமாக இருப்பதை ஆக்கபூர்வமாக உபயோகிக்க வேண்டும் . தொழிலாளர் பிரசனைகளை ஒரு குடும்ப பிரச்னையாக பாவித்து தீர்க்க முயல வேண்டும்.

"போராட்டத்தின் மூலம் தீர்வு என்றால் அது இலவு காத்த கிளி கதை தான் !!"

Thursday 2 July, 2009

தாம்தூம் திருமணங்கள்

ஆவணிமாதம் வந்தாலே குடும்ப தலைவனின் பாடு திண்டாட்டம் தான் .

வீட்டில் நிறைந்து கிடக்கும் கல்யாண பத்திரிகைகளை தேதிவாரியாக அடுக்கி தகுதிக்ஏற்ப புடவைகளை (மண்டபத்தை பொறுத்து ) செலக்ட் செய்து Dry Wash க்கு கொடுத்து , அழகு நிலையம் சென்று என குடும்ப நிதி துறைக்கு இந்த மாதம் பட்ஜெட்டில் புடவை தான்.

நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் என்றால் இன்னும் கஷ்டம். ஆடி தள்ளுபடியில் விலை குறைவு என கணவரிடம் இட்டுக்கட்டி புது பட்டு புடவை வாங்கி கணவரின் வழுக்கை தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

திருமணத்திற்கு செல்பவர்களே இந்த பந்தா என்றால் கல்யாண வீட்டார் செய்வதை பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.

மத்திய நடுத்தர குடும்பங்கள் இளைய தலைமுறையின் வருமானத்தால் சற்று அகல கால் வைக்கவே விரும்புகிறார்கள்.
மேல் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வீட்டு திருமணம் Exclusive ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
புலியை பார்த்து சூடு போட்டு கொண்ட பூனையை போல் , கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெண் /பிள்ளையின் சேமிப்பை தண்ணீராய் செலவு செய்கின்றனர்.

திருமணம் முடிவானவுடன் தர வரிசையில் முதல் மூன்று இடத்தில் உள்ள மண்டபம் மற்றும் சமையல்காரரை தேடி ஓடுகின்றனர். இதற்கு சிபாரிசு வேறு !?

அடுத்தது மெனு . குடும்பத்தினர் அனைவரும் மண்டையை பிய்த்து கொண்டு , யாரும் போடாத ஒரு உணவு வகையாவது இருக்குமாறு முடிவு செய்கிறார்கள் .
நிச்சயம் அது யாரும் வாயில் போடாத உணவு தான்!!!.

மணவறை,மாலை,செண்டு என அனைத்தும் பெண் / மாப்பிள்ளையின் உடையின் நிறத்திற்கு பொருத்தமான மலர்களை தேர்வு செய்கிறார்கள்.
மலர்களின் மணத்தை விட நிறமே முக்கியத்துவம் பெறுகிறது.

பெண் வீட்டாராக இருப்பின் இன்னும் கஷ்டம்டா சாமீ . பெண் அலங்காரத்திற்கு
குறைந்தபட்சம் Rs.3000/- வேண்டும். அழகு நிலையத்தில் திருமண பெண் அலங்காரத்திற்கு Rs. 3000 ஆரம்பித்து Rs.30000/- வரை சொல்கிறார்கள்.
கேட்டால் Package என்கிறார்கள். Rs.30000/- புக் செய்கிறவர்கள் ஒரு மாதம் அழகு நிலையமே கதி என்று கிடக்க வேண்டுமாம். என்ன கொடுமை சார் இது ?!!!
பெண் வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் மணபெண்ணுக்கு நிகராக புது பட்டு புடவை , அதில் embroidary , அலங்காரம் என பட்டை கிளப்புகிறார்கள்.

மண பெண்ணுக்கு எடுக்கப்படும் புடவை விலை கேட்டால் Heart Attack வந்து விடும். குறைந்தபட்சம் Rs.20000/- . அப்புறம் அதில் Designer Embroidary வேறு.
இந்த புடைவையின் விலை மூலமாக தான் மாப்பிள்ளை வீட்டாரின் பண பலம் உறவினர்களுக்கு தெரிகிறது.

மாப்பிள்ளை அழைப்பின் போது எடுத்து செல்லும் சீர் தட்டுகளை அலங்காரம் செய்ய அடையார் ஆனந்த பவன் வேண்டும் . அதுவும் Kaju Sweets ( Rs.350 /Kg).
பெண் வீட்டின் செல்வ செழிப்பு இந்த தட்டுகளில் தான் வெளிப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு திருமணத்தின் மூலமாக தான் இரு வீட்டின் பொருளாதார நிலைமை உலகுக்கு தெரிகிறது .

தற்போது சென்னையில் பரவி வரும் ஒரு பழக்கம் விரைவில் கோவை வந்து சேரும் என நினைக்கிறேன் . திருமணத்தில் வந்தோரை "வாங்க" என இன்முகத்துடன் வரவேற்க கல்லூரி பெண்களை நிற்க செய்கிறார்கள் சென்னையில்?!!!!
"வாங்க வாங்க" என வாய் நிறைய வரவேற்கும் இடத்தில் முகம் தெரியா நபர்கள்.
இதனால் யார் வீட்டு திருமணத்திற்கு வந்துள்ளோம் என குழம்ப தான் வாய்ப்புகள் அதிகம். வரவேற்பில் அன்பை விட அழகு தானே முக்கியம் ?
பரவட்டும் இந்த புது கலாச்சாரம் கொங்கு மண்டலத்திலும் !!!!
"மலர்களின் ராஜா ஒரு ரோஜா தான் . அனைத்து மலர்களும் ராஜாவாக ஆசைபடுகிறதே!"





Wednesday 24 June, 2009

ஆணுக்கு பெண் சமம் ?!!!

சமுதாயத்தில் ஆண்களுக்கு சம உரிமை வேண்டும்
என போரிடும் பெண்களுக்கு சம உரிமை
கிடைத்ததா ?
பள்ளி தொடங்கி பணி வரை இன்று ஆண்களுக்கு
பெரும் சவாலாக இருப்பது பெண் இனமே !!

பள்ளியில் முதல் மார்க் பெறுவது பெண்ணே !

தொழில் சார்ந்த பட்ட படிப்புகளில் மதிப்பெண்
பட்டியலில் முதலிடம் பெறுவதும் பெண்களே !

தெரு கூட்டும் பணி முதல் விமானம் ஓட்டும் பணி
வரை பெண்களின் விண்ணப்பமே முன்னணியில் உள்ளது.

உடல் வலுவிலும் ஆண்களுக்கு இணையானவர்கள்
நாங்கள் என்பதிற்கு கட்டியம் கூறுகிறது வீதிக்கு வீதி
உள்ள பெண்கள் உடற்பயற்சி நிலையங்கள் !!

அழகிலும் ஆண்கள் எங்களுக்கு என்றும் அடிமை தான்
என சொல்லாமல் சொல்கிறது நடுத்தர குடும்ப பட்ஜெட்டில்
இடம் பிடித்துள்ள அழகு நிலைய நிதி ஒதுக்கல்!!

அரசியலிலும் பெண்களின் ஆளுமை வேண்டும் என
30% அளிக்கபட்டுள்ளது .

இவை போறாது என ஆண் ஆசிரிய வர்க்கத்தை
பூண்டோடு அழித்து வருகிறது அரசின் பெண்
ஆசிரிய நியமன உத்தரவு.

ஆண்களுக்கு போட்டி இல்லாமல் கிடைக்கும்
ஒரே பட்டபடிப்பு சமையல் கலை தான்.

பெண்கள் வீட்டிலும், வெளியிலும் ஆண்களுக்கு என
விட்டு கொடுத்த ஒரே துறை தான் சமையல் கலை துறை!!!

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இருந்த குடும்ப வாழ்க்கை
முறை இன்று சத்தியமாக நகர்புறங்களில் இல்லை.
மிகவும் பின் தங்கிய கிரமாங்களில் அதுவும் அரிதாக பார்க்கலாம் .

அறிவிலும், அழகிலும் , பணத்திலும் சற்றே குறைந்த ஆணின்
கனவு , எதிர்காலம் இப்போட்டிகளால் கலைந்து போவது தான்
நிதர்சனமான உண்மை .
எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்ற
ஒரு ஆணின் பின் இருப்பதும் பெண்ணே !

உள்ளாட்சி துறை , வெளிஉறவுதுறை என இரு துறைகளையும்
தன்னிடம் வைத்துள்ள இல்லத்தரசிகள் கணவரையும் , மகன்களையும்
படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை . குண்டுசி முதல் கார் வாங்குவது
வரை அவர்கள் விருப்பதிற்கு தான் ஆண்கள் தலை ஆட்ட வேண்டும்.

மேற் குறிப்பட்ட ரகம் இன்று வேண்டுமானால் இந்திய நாட்டின் ஜன தொகையில் 10% இருக்கலாம் . ஆனால் மிக விரைவில் இது 90%
ஆகி விடும்.
மோட்டார் பைக் விற்பனைக்கு சமமாக விற்பனை ஆகும் scooty pep
தான் இதற்கு அத்தாட்சி .

ஆண்களுக்கு சம உரிமை தர வேண்டிய சூழலில் தான்
பெண்கள் சமுதாயம் இருக்கிறது.

பாவம் பிழைத்து போகட்டும் !
சற்றே இடம் கொடுங்கள் அவர்கள் நிற்க !!!

மலர்களில் அவர்கள் இலையாகவது இருந்து விட்டு போகட்டும் !!!!!!!



Wednesday 17 June, 2009

சகலகலாவல்லவர்

எங்கள் வீட்டின் சகல கலா வல்லவர் சாட்சாத் என் மாமனார் தான்.

இன்று அவர் எங்களுடன் இல்லை என்றாலும் அவர் நினைவுகள் பசுமையாய்
அனைவர் மனதிலும் பதிந்து உள்ளது.



என் மாமனார் திரு.நாராயணசாமி, பள்ளி படிப்பை முடித்தவுடன் PSG Industrial Institute இல் வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறும் போது Pump Assembly Superintendent ஆக ஓய்வு பெற்றார். அவர் அங்கு வேலை செய்யும் போது நான் PSG Polytechnic இல் Diploma பயின்று வந்தேன். என் Workshop training இன் போது இவரிடம் தான் ரிப்போர்ட் Sign வாங்க வேண்டும். வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் Sandwich Students இவருக்கு "மாமா " என புனை பேர் வைத்து இருந்தோம். பின்னாளில் அவரே எனக்கு மாமனார் ஆனது தான் ஆச்சர்யம்!!!. என் திருமணத்திற்கு வந்த என் கிளாஸ் மேட் அனைவரும் "மாமாவா உன் மாமனார் ?" என துக்கம் விசாரித்தது தனி கதை .

வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும், வீட்லேயே Workshop வைத்து , என் கணவரையும் வேலைக்கு அனுப்பாமல் சொந்த தொழில் செய்ய வைத்தார்.
வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பாக நேரம் தவறாதவர்.
அவர் நெற்றியில் நாமத்துடன் வெள்ளை வேட்டி , கை வைத்த பனியனுடன்
Workshop வாசலில் இருக்கிறார் என்றால் காலை மணி சரியாக 7 என சொல்லலாம். ஒரு வேலையை செய்யும் முறை பற்றி தெளிவாக சொல்லி குடுப்பார். அவர் கடைசி வரை வேலை செய்தார். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எடுத்துகாட்டாக இருந்தார்.
வீட்டுக்கு தளம் போடுவது, தொட்டி கட்டுவது, மர கதவு, இரும்பு கதவு செய்வது போன்ற அனைத்து வேலைகளும் செய்வார். எங்கள் வீடுகளில் இன்னும் அவர் செய்த இரும்பு Compund Gate தான் உள்ளது.
எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முடி திருத்தும் பணியை கூட அழகாக செய்வார்.

அவர் கை வண்ணம் எங்கள் சமையல் அறையையும் அலங்கரிக்கும். Cooker, பால் Cooker கை பிடி உடைந்தால் புதிய bakelite கைப்பிடி மாற்ற விட மாட்டார். தானே மர கைப்பிடி செய்து மாற்றுவார். கத்தி , இரும்பு உரல் , தோசை கல் அனைத்தும் அவர் கைவண்ணம் தான்.
சமையலில் அவர் நள மகாராஜா தான் . சூப்பரா சமைப்பார் . யாருக்காகவும் காத்திருக்காமல் அவர் சமைக்க ஆரம்பித்து விடுவார். என்ன அவர் சமையலில் முருங்கைகாய் முக்கிய இடம் பிடிக்கும். தன் பசியை மட்டுமன்றி அனைவரின் பசி , ருசி பற்றி அறிந்தவர். பணி , பள்ளியில் இருந்து திரும்பும் போது மாலை உணவு தயாராக இருக்கும். நாங்கள் தனி குடித்தனம் இருந்தாலும் அவர் செய்யும் மாலை உணவை எங்களுக்கு தவறாமல் குடுத்து அனுப்புவார்.

மனைவிக்கு சுதந்திரம் அளிப்பதில் அவர் அர்த்தனரிஸ்வரர்.
வரவு , செலவுகளை சரியாக கணக்கு வைப்பார் சித்ரகுப்தனை போல் !
இவரின் சிக்கனத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும்.
வாழ்வில் எளிமையை பற்றி இவரிடம் தான் கற்க வேண்டும்.
இவரிடம் நல்ல பெயர் வாங்குவது வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்
பெறுவதற்கு சமம்.

மொத்தத்தில் இவர்
" மலர்களில் ஒரு பிரம்ம கமலம் "



Tuesday 9 June, 2009

மாற்றப்படும் இளைய சமுதாயம்

இளைய சமுதாயம் செல்லும் பாதையை வடிவமைத்து கொடுக்கும் மூத்த தலைமுறையினர் சரியாக செயல்படுகின்றனரா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று நிலவும் குடும்பவாழ்க்கைமுறை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால்,
குழந்தைகள் தனியே விடபடுகின்றனர். குழந்தைகள் வளர வளர நம் குற்றஉணர்வு அவர்கள் கேட்டதை வாங்கி தர செய்கிறது. குழந்தைகளிடம் உள்ள தவறுகளை கவனிக்க தவறுவதின் பலனை நாம் தான் அனுபவிக்க வேண்டும் பின்னாளில்.
குழந்தைகளுக்கு பத்துவயதாகும் முன்பே நம் வீட்டு பழக்கவழக்கம் , பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பது,
சுழலுக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்வது போன்றவைற்றை சொல்லி கொடுக்க வேண்டும். குறிப்பாக தெய்வ நம்பிக்கையை வளர செய்ய வேண்டும்.

எந்த மதம் ஆனாலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க செய்யும் தெய்வ நம்பிக்கை.

டீன் ஏஜ் வயதில், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நாம் தான் dress select செய்ய வேண்டும். நாகரிகமாக இருக்க வேண்டும் என்று மற்றவர் கவனத்தை ஈர்க்கும் ஆடையை எடுக்க அனுமதிக்க கூடாது. இப்பொது பெரும்பாலான பெண்கள் தங்கள் பெண் குழந்தைகள் சினிமாவில் வரும் கதாநாயகிகள் போல் ஆடை அணிந்து அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர்கள் விரும்பும் உடையை வாங்கி தருகின்றனர். இது மிகவும் தவறான பழக்கம்.

கண்ணை உறுத்தாத மனதுக்கு வெளிச்சம் தர கூடிய ஒரு வெள்ளி குத்துவிளக்கு போன்று தான் நம் பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டுமே தவிர இருட்டை பகலாக்கும் மெர்குரி விளக்காக அல்ல.

மாறி வரும் நாகரிகமான யுகத்தில், தனக்கு மனைவியாக வரும் போகும் பெண்ணை பற்றிய ஆணின் வரையறை மாற்றம் பெறவில்லை . இப்பொது பெண் பார்த்து கொண்டு இருக்கும் பையனிடம் கேளுங்கள் " உனக்கு வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என ? "நிச்சயம் அழகான அமைதியான குடும்பபாங்கான பெண் வேண்டும் என தான் பதில்வருமே தவிர Hitech பெண்
வேண்டும் என சொல்ல மாட்டார்கள்.
பெண் குழந்தைகளை பொறுத்த வரை எல்லா சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய புத்திசாலித்தனம் , நிறை குடம் போன்ற படிப்பறிவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, விட்டு கொடுத்தல் , சுற்றத்தை அனுசரிக்கும் குணம் , அடக்கமான அழகு ஆகியவையே நாம் அவர்களுக்கு கொடுக்கும் சீர்.
ஆண் குழந்தைகளுக்கு முக்கியமாக கற்று கொடுக்க வேண்டியவை பொய் சொல்லாமை. அவர்களுக்கு வேண்டிய சுதந்திரம் நிச்சயம் நாம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா என பார்க்க வேண்டும்.
சிறந்த கல்வியறிவு, நல்ல பழக்க வழக்கம் , அனைவரையும் புரிந்து கொள்ளும் மனம், விட்டு கொடுத்தல் , பெண்களை சமமாக நினைக்கும் குணம் இவற்றுடன் வளர்க்கப்படும் நம் ஆண் குழந்தைகள் நம் நாட்டின் சிறந்த குடிமகன்கள். அவர்களால் ஒரு சிறந்த குடும்பம் , சமுதாயம் ,நாடு உருவாவது நிச்சயம்.
இல்லைஎனில் மாமியார்,மாமனார் வேண்டாம் என தனிகுடித்தனம் வந்துள்ள நாம் நிச்சயம் நம் குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு அன்றும் தனி குடித்தனம் தான் இருப்போம் .
எதிர்கால இந்திய கலாசாரம் நம் வளர்ப்பில் தான் உள்ளது. சற்று யோசித்து செயல்படுங்கள்.

நன்றாக வளர்க்கப்பட்ட நம் குழந்தைகள் கூட்டமாக பூத்துள்ள மனம் வீசும் மல்லிகை மலர்கள்.




Saturday 23 May, 2009

தேள் கடி


தலைப்பை பார்த்து ஏதோ தேள் கடிக்கு வைத்தியம் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். மனிதனின் குணங்களை பற்றி சொல்லும் புத்தகத்தை பற்றியது.

ஆங்கிலத்தில் லிண்டா கூட்மன் எழுதிய SUN SIGNS புத்தகத்தை அனைவரும் அறியும் வாய்ப்பு குறைவு.


அருமையான புத்தகம். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவர்கள் இந்த குணங்களுடன் தான் இருப்பார்கள் என வரையறுத்து சொல்ல பட்டு இருக்கிறது.

90% சரியாக உள்ளது . பன்னிரு மாதங்களுக்கும் Aries (March 21- April 20) , Taurus (April 21 - May 21), Gemini (May 22 - June 21), Cancer ( June 22 - July 23), Leo (July 24 - Aug 23), Virgo( Aug 24- Sep 23), Libra (Sept 24 - Oct 23),Scorpio (Oct 24 - Nov 22),Saggitarius (Nov 23- Dec 21),Capricorn ( Dec 22- Jan 20),Aquarius ( Jan 21 - Feb 19),Pisces ( Feb 20 - Mar 20) என பிரித்து அதுவும் ஆண்,பெண் ,குழந்தையாக இருந்தால் என்ன குணங்களுடன் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
ஆதிக்கம் செலுத்த கூடிய personality என பார்த்தால் அது scorpio மற்றும் taurus மாதங்களில் பிறந்தவர்கள் தான்.
Gemini இரட்டை குணம் உடையவர்கள். அவர்களின் இன்னொரு முகத்தை பற்றி தெரிந்து கொள்வது கடினம்.
மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது , மனம் புண்படாமல் பேசுவது, விட்டு கொடுப்பது,மொத்தத்தில் அன்பானவர்கள் pisces மாதத்தில் பிறந்தவர்கள்.
குடும்பமே கோவிலாக நினைத்து வாழ்பவர்கள் cancer மாத பெண்கள்.
ஆனால் அழுமூஞ்சிகள் .
நேர்மை கண்டிப்பாக saggitarius இடம் கிடைக்கும். தவறிலும் ஓர் நேர்மை இவர்களிடம் இருக்கும். இவர்கள் கோமாளியாகவும் , புத்திசாலியாகவும் இரு வேறு குணங்களை உடையவர்கள்.
நான் அனைத்து sun signs பற்றி முழுதும் படிக்கவில்லை. ஆனாலும் scorpio பற்றி
அறிந்தது 100% உண்மை. Living with Scorpio enables me to compare the characteristics mentioned in the book. Also i have so many scorpio's around me.
Scorpio
சாதிக்க பிறந்தவர்கள். நினைத்ததை அடையும் வரை ஓய மாட்டார்கள்.
கொடுமையான உண்மையை பேசுபவர்கள். மற்றவரின் விருப்பு , வெறுப்புகளை பற்றி துளியும் கவலை படாதவர்கள். வெளியே குளுமையாக தெரிந்தாலும் உள்ளே கொதிக்கும் அனல் படர்ந்திருக்கும். காதல் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் துளிர்த்திருக்கும்.
ஒரு குழுவில் என்னால் ஒருவரின் குணநலன்களை பற்றி சொல்ல முடியும் என கூறினால் " எங்கே என்னை பற்றி சொல் பார்க்கலாம் " என பதில் வந்தால் நிச்சயம் அவர் SCORPIO Personality தான். பாராட்டும் ஒரு குணம் என்னவென்றால் , போட்டியில் ஜெயிப்பதற்குக்காக கருத்தை மாற்றி சொல்ல மாட்டார்கள். அவர்களின் முக்கிய முடிவுகள் மற்றவரின் கருத்துகளால் ,மாற்றம் பெறுவதில்லை.
STUBBORN SCORPIO
சக பயணியாக பயணிக்க தைரியம் வேண்டும் என்னை போல !!!!!????????
மொத்தத்தில் இந்த ராசி தோட்டத்தில் SCORPIO ஒரு காகித மலர் .

உங்கள் குணங்களை பற்றி தெரிந்து கொள்ள பார்க்க கீழ் கண்ட URL விஜயம் செய்யவும்.