Sunday, 26 April 2009

நட்புக்கு இலக்கணம்


உறவுகளை இறைவன் முடிவு செய்ய , நட்பை மட்டும் நாம் முடிவு செய்ய அனுமதி அளித்த காரணம் நல்லவர்களையும் கெட்டவர்களையும் அறிந்து மன முதிர்ச்சி பெறவே!


எனக்கும் ஒரு அருமையான நண்பர் உண்டு. என்னுடன் பணிபுரியும் போது அறிமுகமாகி இன்று எங்கள் குடும்ப நண்பரான திரு.தேவராஜ் அவர்கள். கட்டுரையில் தான் அவருக்கு மரியாதை. வயதில் என்னை விட இளையவர் . ஆனால் மனதில் மிகவும் பக்குவப்பட்டவர் . மற்றவர்களுக்காக தனது விருப்பங்களை விட்டு கொடுத்து விடுவார். மனிதநேயம் மிக்கவர். தனது மாமனார் , மாமியாரை தாய் தந்தை போல் எண்ணுவார். தனது வார்த்தைகள் , செயல் யாரையும் புண்படுத்தாமல் இருக்குமாறு பார்த்து கொள்வார்.


எங்கள் நட்பின் வயது பதின்மூன்று. இன்று வரை எனக்கு சந்தோசமோ ,துக்கமோ நான் அழைக்கும் முதல் நபர் இவர் தான். எனக்கு மட்டும் அல்ல என் குடும்பத்தினருக்கும் உதவி தேவை என்றால் முகம் சுளிக்காமல் செய்வார். என் கணவரிடம் நான் சொல்ல சங்கடப்படும் என் பிறந்த வீட்டு சங்கதிகளை இவரிடம் தான் சொல்லுவேன். என் தந்தை இறந்த போது எனக்கு மிகவும் தைரியம் சொன்னவர். எந்த உதவி கேட்டாலும் சிறிதும் யோசிக்காமல் உடனே சரி என்று அதற்காக செயல்படுவார்.

எனது நட்பில் கூட சிறுது சுயநலம் இருக்கும் . ஆனால் அவரது நட்பில் சிறிதும் களங்கம் இல்லை.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக, எனது கவலைகள் இவரின் ஆலோசனை / உதவி இல்லாமல் முடிந்ததில்லை

எனது பலங்களில் இவரது நட்பும் ஒன்று.

" உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் "

நான் சொல்லி விட்டேன்.


அவரது மகன் தருண் எங்கள் வீட்டு சுட்டி பையன் . அவரது குடும்பத்தினரை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டு குடுத்து வாழுபவர்கள்.
அந்த தோட்டத்தில் இவர் ஒரு பவள மல்லி .


வீட்டு தோட்டம்


இது என் முதல் பதிவு . தவறு இருப்பின் மன்னிக்கவும்.

சிறு வயது முதலே எனக்கு செடி கொடிகள்,தோட்டம் , மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என் கனவில் தோட்டத்துடன் கூடிய அழகிய வீட்டில் என் வருங்காலம் அமையும் என நினைத்தேன். ஆனால் என் வாழ்க்கை கோவை மாநகரத்தில் அமைந்தது.மாமியார் ,வீட்டில் இருக்கும் சிறு காலி இடத்தில் ரோஜா,மல்லிகை முதலிய செடிகளை வைத்து இருந்தார். ரோஜா தினமும் நெறைய பூக்கும். கணவர் என்னை வெளியே அழைத்து செல்லும் போது , நான் கிராஸ் கட் ரோட்டில் லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் அருகே செண்டு மல்லிகை கட்டி விற்பார்கள் .அதை மிகவும் ஆசைப்பட்டு கேட்பேன். ஆனால் அவர் வீட்டில் நெறைய பூ இருக்கிறதே இங்க எதற்கு பணம் குடுத்து வாங்க வேண்டும் என்பார். திருமணத்திற்கு செல்லும் போது கூட வாங்கி தர மாட்டார். ௨0 ரூபாய்க்கு செடி வாங்கி வைத்தால் வருடம் முழுவதும் பூ கிடைக்கும் என்பார்.
நான் ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்ட சில ஆண்டுகள் ஆயின. கனவு இல்லம் உருவானாலும் தோட்டம் நான் நினைத்த மாதிரி வளர மேலும் சில நாட்கள் ஆனது .
இப்போது பச்சை பசேலன்று கண் கொள்ளா காட்சியாக உள்ளது. மல்லிகை , முல்லை, செண்பகம் ,ரோஜா முதலிய மலர்கள் அழகாக பூக்கிறது. வீட்டு வாசலில் அமர்ந்தால் வாசனை மனதை கொள்ளை கொள்ளும்.

நாங்கள் யாரும் பூக்களை முழுதும் பறிக்காமல் விட்டு விடுவோம். பக்கத்து வீட்டுகாரர்கள் முதலில் எங்களிடம் பூக்கள் பறித்து கொள்கிறோம் என கேட்டார்கள். நாங்கள் மறுத்து விட்டோம். இப்பொது எல்லா மலர்களும் நன்றாக பூக்கிறது.


என் கனவு இல்லம் , வீட்டு தோட்டம் அமைய பதிமூன்று ஆண்டுகள் ஆயிற்று. வீட்டு தோட்டம் அமைய முக்கிய காரணம் என் கணவர் தான். அவர்


நான் வேலைக்கு செல்லும் பெண்மணி. பூக்கும் பூக்களை ரசிக்க எனக்கு கிடைக்கும் நேரம் மிக குறைவு .


விடுமுறை தினத்தன்று அதிகாலையில் வாசலில் அமர்ந்து காபி குடிக்கும் போது மிகவும் ஏக்கமாக இருக்கும். இல்லத்தரசிகள் போல் அவசரம் இல்லாமல் நம் இல்லத்தை , தோட்டத்தை எப்போது நிதானமாக ரசிக்க போகிறோம் ? அந்த நாள் வரும் போது நம் ரசனை மாறாமல் இருக்குமா ? அன்றும் நம் கடமைகளை செய்ய பறந்து கொண்டு தான் இருப்போம் !


நம் வருங்கால வாரிசுகள் நன்றாக இருக்க நாம் செய்யும் தியாகங்களில் இதுவும் ஒன்று. இதன் அருமை அவர்களுக்கு புரிந்தால் சரி.